சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதையொட்டி ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
‘ஜெயிலர்’
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமன்னா நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.
ஆட்டம், பாட்டம்
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘ஜெயிலர்’ திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் முதல் நாள் முதல் காட்சி (FDFS) 9 மணிக்கு வெளியானது. இதனை ஆட்டம் பாட்டம் மற்றும் மேள, தாளங்களுடன் பட்டாசு வெடித்து ரஜினி ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். சென்னை, மதுரை, கோவை, வேலூர், சேலம் மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளிலும் ‘ஜெயிலர்’ படம் வெளியாகியுள்ளது. மதுரையில் ரஜினி ரசிகர்கள் சிறைக்கைதிகள் வேடம் அணிந்து ‘ஜெயிலர்’ படம் பார்க்க வந்தனர்.
கேக் வெட்டி கொண்டாட்டம்
புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. பெங்களூரு விவேக் நகர் பகுதியில் உள்ள தியேட்டரில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். திண்டுக்கலில் உள்ள திரையரங்க வளாகங்களில் குவிந்திருந்த ரஜினி ரசிக்ரகள் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.