மணிப்பூரில் நடந்த கொடூரங்கள் இந்தியாவை கொன்றுவிட்டதற்கு சமம் எற்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஆவேசத்துடன் கூறியுள்ளார்.
பயப்பட வேண்டாம்
பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் இன்று 2-வது நாளாக விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி சார்பில் விவாதத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய ராகுல் காந்தி; நான் இன்று யாரையும் அதிகம் தாக்கி பேசப்போவதில்லை, நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். மணிப்பூர் பற்றியே பேசுவேன்; அதானி பற்றி பேசமாட்டேன், பாஜகவினர் பயப்பட வேண்டாம், என்றார்.
கடும் விமர்சனம்
தொடர்ந்து அவர் பேசுகையில்; “பிரதமர் இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை; ஏனென்றால் அவர் மணிப்பூர் இந்தியாவில் இல்லை என நினைக்கிறார். மணிப்பூரை ஒன்றிய அரசு இரண்டாக பிரித்துவிட்டது. மணிப்பூரில் நடந்த கொடூரங்கள் இந்தியாவை கொன்றுவிட்டதற்கு சமம். மணிப்பூர் கொடூரத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள் என பல தரப்பினரும் என்னிடம் குமுறினார்கள். பாஜக அரசு இந்தியா என்ற கருத்தோட்டத்தையும், பாரம்பரியத்தையும் அழித்துவிட்டது. மணிப்பூரில் பாரத மாதாவையே பாஜக அரசு கொன்றுவிட்டது. பாரத மாதாவை பாதுகாப்பதற்கு பதிலாக, பாரத மாதாவை பா.ஜ.க. அரசு கொன்றுவிட்டது”. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.மணிப்பூர் சம்பவம் இந்தியாவை கொன்றுவிட்டதாக ராகுல் காந்தி பேசியதற்கு பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கக்கங்களை எழுப்பினர்.