மது அருந்துவது எந்த பிரச்சினைக்கும் தீர்வு ஆகாது என்று நடிகை மனிஷா கொய்ராலா உருக்கமாக கூறியிருக்கிறார்.
மனதில் இடம் பிடித்த நடிகை
90களில் முன்னணி நடிகையாக இருந்து வந்த மனிஷா கொய்ராலா, ஹிந்தியில் பல படங்களில் நடித்து வந்தார். 1995 ஆம் ஆண்டு பம்பாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான அவர், முதல் படத்தில் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார். அதன்பிறகு ஹிந்தியில் கவனம் செலுத்தி வந்த மனிஷா,ஷங்கரின் இந்தியன் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் முதல்வன் படத்திலும் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து ஆளவந்தான், பாபா, மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்திருந்தார். கடைசியாக 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் ஹன்சிகாவிற்கு தாயாக நடித்திருந்தார். பின்னர் ஹிந்தி படங்களில் நடிப்பதில் மனிஷா கொய்ராலா பிஸியாகிவிட்டார்.
பாதிப்பு
நேபாளத்தை பூர்வீகமாக கொண்ட அவர், கடந்த 2010 ஆம் ஆண்டு சாம்ராட் தேகல் என்பவரை திருமணம் செய்து, பின்னர் 2 வருடத்தில் விவாகரத்து செய்தார். அதன்பின் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனிஷா, வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று பெரும் போராட்டத்திற்கு பிறகு மீண்டார். அதனையடுத்து தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
தீர்வாகாது
இந்நிலையில் தனக்கு இருந்த மதுப்பழக்கம் குறித்து மனிஷா கொய்ராலா பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது; “நான் விவாகரத்து பெற்றதும் கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொண்டேன். மதுப்பழக்கத்துக்கு அடிமையானேன். அதன் பிறகு வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டது. மதுப்பழக்கம் காரணமாக எனது மதிப்பு மிக்க வாழ்க்கையை இழந்தேன். மது அருந்துவது பிரச்சினைக்கு தீர்வு ஆகாது. மது எந்த பிரச்சினையில் இருந்தும் நம்மை வெளியேற்றாது. மேலும் பிரச்சினைகளில் மூழ்கடிக்கவே செய்யும். இதனை புரிந்து கொண்டு நடக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.