உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் காலமான கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டியின் உடலுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
மூத்த தலைவர்
கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2 முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி தொகுதியில் தொடர்ந்து 52 வருடங்களுக்கும் மேலாக எம்.எல்.ஏவாக இருந்தார். சமீபத்தில் உம்மன்சாண்டிக்கு தொண்டை புற்றுநோய் ஏற்பட்டது. இதற்காக சில மாதங்களுக்கு முன் ஜெர்மனிக்கு சென்று சிகிச்சை பெற்ற அவர், அதன்பின் பெங்களூரு சின்மயா மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் காலமானார்.
பணிவான நபர்
உம்மன்சாண்டி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்; “கேரளாவின் வளர்ச்சிக்காக தன் வாழ்நாளை பொதுவாழ்விற்கு அர்ப்பணித்த பணிவான நபரை நாம் இழந்துவிட்டோம். நான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது அவர் கேரள முதலமைச்சராக செயல்பட்டபோதான எங்கள் சந்திப்புகளை நினைவு கூற்கிறேன். இந்த சோகமான நேரத்தில் எனது இரங்கலை உம்மன் சாண்டி குடும்பத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நேரில் அஞ்சலி
எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கர்நாடக மாநிலம் வந்துள்ள சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மறைந்த உம்மன் சாண்டியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதேபோல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஆகியோரும் உம்மன்சாண்டியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
முதலமைச்சர் அஞ்சலி
இதேபோல், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உம்மன்சாண்டியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆறுதல் கூறினார். உம்மன்சாண்டி மறைவையொட்டி கேரளாவில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.