தேனி மக்களைத் தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேர்தல் வழக்கு
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்திரநாத் தனது வேட்பு மனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளார் என்றும் எனவே, தேனி தொகுதியில் அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரியும் தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
பரபரப்பு தீர்ப்பு
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய எதுவாக தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.