‘லியோ’ படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் போதைப் பொருளை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதால் அதனை தடை செய்ய வேண்டுமென வலியுறுத்தி சென்னை போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இறுதிக்கட்ட படப்பிடிப்பு
நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இதில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் பிரியா ஆனந்த், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் விறுவிறுப்பாக நடந்தது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. லியோ படத்தின் முதல் பாடலான “அல்டர் ஈகோ நா ரெடி” பாடல் விஜய்யின் பிறந்தநாளன்று (ஜூன் 22) வெளியாகியது ரசிக்ரகளை கவர்ந்தது.
போலீஸில் புகார்
இந்நிலையில், ‘லியோ’ படத்தில் இடம்பெற்றுள்ள “நா ரெடி” பாடல் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் போதைப் பொருள் புழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் இருப்பதால் தடை செய்ய வேண்டும் என சென்னை கொருக்குப்பேட்டை ஜேஜே நகரை சேர்ந்த ஆர்டிஐ செல்வம் என்பவர் ஆண்லைன் வாயிலாக புகார் அளித்துள்ளார். தமிழக அரசும், காவல்துறையும் போதை பொருள் சம்மந்தமாக விழிப்புணர்வு நடத்தி வரும் நிலையில், போதைப் பொருள் புழக்கத்தை ஆதரிக்கும் வகையில் இந்த பாடல் இடம்பெற்றுள்ளதால் விஜய் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.