கல்வியை படிப்பை மட்டும் உங்களிடம் இருந்து எடுக்க முடியாது என்றும் பள்ளி, கல்லூரி படிப்பு மட்டும் முழுமையான கல்வி கிடையாது எனவும் நடிகர் விஜய் கூறியுளளார்.
கல்வி விழா
விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்று வருகிறது. தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை 234 தொகுதிகளிலும் கணக்கெடுத்து அவர்களைப் பெற்றோர்களுடன் நீலாங்கரை பகுதியில் இருக்கும் தனியார் மண்டபத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
சூழ்ந்த ரசிகர்கள்
விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் தனது இல்லத்திலிருந்து நீலாங்கரை மண்டபத்திற்கு காரில் சென்றார். அவருடன் ரசிகர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து சென்றனர். பின்னர் நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கத்திற்கு சென்ற அவர், தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து சான்றிதழ்களையும், ரொக்கப் பரிசையும் வழங்கினார்.
வைர நெக்லஸ்
பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு நடிகர் விஜய் சான்றிதழ் வழங்கி, வைர நெக்லஸ் ஒன்றை பரிசளித்தார். அதனைதொடர்ந்து மாற்றுத்திறனாளியான மாணவி ஆர்த்திக்கு நடிகர் விஜய் மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கினார். மேலும் மாணவி ஆர்த்தியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
மாணவர்களுக்கு அறிவுரை
முன்னதாக நடிகர் விஜய் மேடையில் பேசுகையில், “இதுவரை பல நிகழ்ச்சிகளில் பேசிய நான் முதன்முறையாக கல்வி நிகழ்ச்சியில் பேசுகிறேன். ஒரு பொறுப்புணர்ச்சி வந்ததைப் போல் இருக்கிறேன். கல்விக்கு ஏதாவது செய்ய வேன்டுமென்ற எண்ணம் நீண்ட நாள் என் மனதில் இருந்தது. அது இன்று நிறைவேறியிருக்கிறது. படிப்பை மட்டும் உங்களிடம் எடுக்க முடியாது. பள்ளி, கல்லூரி படிப்பு மட்டும் முழுமையான கல்வி கிடையாது. தோல்வி அடைந்தவர்களை வெற்றி பெறச் செய்தீர்கள் என்றால் அது எனக்கான பரிசு. சமூக வலை தளங்களில் பரவும் பல தகவல்கள் போலியானவை. கவர்ச்சிக்கரமான பதிவுகள் மூலம் நம்மை ஈர்க்க முயற்சிப்பார்கள். பெற்றோர் இல்லாத புதிய சூழலில் உங்களது பண்பு நலன்களை கடைபிடிக்க வேண்டும். படிப்பை விட ஒழுக்கம் முக்கியமானது”. இவ்வாறு நடிகர் விஜய் பேசியுள்ளார்.