ஐசியூவில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சைக்கு முன்பு செய்ய வேண்டிய பரிசோதனைகள் செய்யப்பட்டுவருவதாகவும், இந்த சோதனையின் அடிப்படையில் அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தீவிர சிகிச்சை
சென்னை, கரூரில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி இல்லம் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 13 ஆம் தேதி சோதனை நடத்தினர். அந்த சோதனையின் முடிவில் நள்ளிரவில் செந்தில் பாலாஜியை அவரது இல்லத்தில் இருந்து விசாரணைக்கு அழைத்து செல்ல அமலாக்கத்துறை அதிகாரிகள் முயற்சி செய்தனர். அப்போது திடீரென செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை, அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து செல்வதற்காக கொண்டு வந்த காரில் ஏற்றி, சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருடைய இதய ரத்த நாளங்களில் 3 அடைப்புகள் இருப்பதாக தெரிவித்தனர். அதற்காக அவருக்கு உடனடி சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
காவேரி மருத்துவமனைக்கு மாற்றம்
இதனிடையே, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி வேண்டி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம், செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி அளித்ததை தொடர்ந்து, ஓமந்தூரார் மருத்துவனையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செந்தில்பாலாஜி நேற்று இரவு காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீவிர கண்காணிப்பு
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்பாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இன்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “அமைச்சர் செந்தில்பாலாஜி ஜூன் 15 ஆம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய நோய் மூத்த மருத்துவர் ரகுராம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அவரை சோதனை செய்தனர். இந்தச் சோதனையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்துள்ளனர். தற்போது அவருக்கு அறுவை சிகிச்சைக்கு முன்பு செய்ய வேண்டிய சோதனைகள் செய்யப்பட்டுவருகிறது. இந்த சோதனையின் அடிப்படையில் செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது அமைச்சர் செந்தில்பாலாஜி, ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள் கொண்ட குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறது