பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு 3 ஆண்டுக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாலியல் தொல்லை புகார்
தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பெண் எஸ்.பி. ஒருவருக்கு, சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், அவருக்கு முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் உடந்தையாக இருந்ததாகவும் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார், சிறப்பு டிஜிபி உள்ளிட்ட 2 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். தமிழக அரசு முன்னாள் தலைமைச் செயலாளர், முன்னாள் உள்துறை செயலாளர் என ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் காவல்துறையினர் என 68 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அரசுதரப்பு, எதிர்தரப்பு வாதங்களை நீதிபதியிடம் முன்வைத்தனர்.
வழக்கு விசாரணை
இந்த வாதங்கள் முடிவடைந்த நிலையில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டிருந்தார். அதன்படி கடந்த 12 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நேரில் ஆஜரானார். தொடர்ந்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வைத்தியநாதன் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்தார். அவரைத்தொடர்ந்து சிறப்பு டிஜிபி தரப்பில் வழக்கறிஞர் ரவீந்தரனும், எஸ்.பி. கண்ணன் தரப்பில் வழக்கறிஞர் ஹேமச்சந்திரன் ஆஜராகி எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்தனர். வழக்கில் அனைத்து விசாரணைகளும் நிறைவுபெற்றதாக அறிவித்த நீதிபதி புஷ்பராணி, வரும் 16 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படுமென்றும், அன்றையதினம் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் முன்னாள் செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் ஆகிய இருவரும் நேரில் ஆஜராக வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.
அதிரடி தீர்ப்பு
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், ராஜேஷ் தாஸூக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. அதேபோல், ராஜேஷ் தாஸ் உத்தரவிபடி பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி. கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.