அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்றக் காவலை ரத்து செய்யக் கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
திடீர் உடல் நலக்குறைவு
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட கோரி அமலாக்க பிரிவு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, மருத்துவமனைக்கு சென்று செந்தில் பாலாஜியை பார்வையிட்டு, பின் அவரை வரும் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
மனுக்கள் தாக்கல்
இதையடுத்து, நீதிமன்ற காவலில் வைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிராகரிக்க கோரியும், ஜாமீன் வழங்கக் கோரியும், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி வழங்க கோரியும் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நேற்று மாலை 4.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்க பிரிவு தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.அல்லி வழக்குகளை இன்றைக்கு ஒத்திவைத்தார்.
தள்ளுபடி
இன்று காலை வழக்கு விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்றக் காவலை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். நீதிமன்ற காவல் ஏற்கனவே செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுவிட்டதால் இந்த மனு விசாரணைக்கு செல்லத்தக்கது அல்ல என்று அவர் தெரிவித்தார். செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுவிக்க கோருவது மற்றும் காவிரி மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி அல்லி தெரிவித்தார்.