கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பக்கப்பட்ட நிலையில் ஆர்வமுடன் வந்த மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
கோடை விடுமுறை
தமிழகத்தில் ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும், பல்வேறு மாவட்டங்ளில் வெப்ப அலை வீசியதாலும் பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க வேண்டும் என பெற்றொர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ஜூன் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பக்கப்படுவதாக அறிவித்த நிலையில், வெயிலின் தாக்கம் குறையாததன் காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தல்படி, 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இன்றும் (ஜூன் 12) 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்காளுக்கு 14 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.
பள்ளிகள் திறப்பு
அதன்படி இன்று தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன. தொடக்கப் பள்ளிகள் தவிர அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டதால் மாணவ – மாணவிகள் உற்சாகத்துடன் வகுப்புகளுக்கு சென்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றனர். குறிப்பாக 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு செல்லும் மாணவ – மாணவிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் வகுப்புகளுக்கு சென்றனர். பள்ளி திறந்த முதல் நாளிலேயே மாணவர்களுக்கு அரசின் சார்பில் சீருடை, பாடப்புத்தகம், நோட்டு புத்தகம், பேக் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
வரவேற்ற அமைச்சர்
விருகம்பாக்கம் அரசு ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலை பள்ளியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் பாடப்புத்தகம் மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்கினார். இதேபோல் எல்லா பள்ளிகளிலும் மாணவ – மாணவிகள் உற்சாகமாக வகுப்புகளுக்கு வந்தனர். நண்பர்கள், ஆசிரியர்களை சந்தித்து மனம் விட்டு பேசினர்.