ஜூன் 7 ஆம் தேதி நடைபெறும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூளுரை

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தற்போது தனித்து செயல்பட்டு வருகிறார். அவருடன் எம்.எல்.ஏ.க்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். தொண்டர்கள் ஆதரவுடன் அதிமுகவை கைப்பற்றுவோம் எனக் கூறி அதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வந்த ஓபிஎஸ், முதற்கட்டமாக திருச்சியில் மாநாடு ஒன்றை நடத்தினார்.

சந்திப்பு

அடுத்தகட்டமாக சசிகலா, டிடிவி தினகரனை சந்திக்கப் போவதாக அறிவித்தார். டிடிவி தினகரனை சந்தித்த ஓபிஎஸ், சசிகலாவை இதுவரை சந்திக்காமல் இருந்த நிலையில், ஓபிஎஸ்.சின் ஆதரவாளரான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. கடந்த மாதம் 29ஆம் தேதி டிடிவி தினகரனையும், அதைத்தொடர்ந்து சசிகலாவையும் சந்தித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். ஜூன் 7 ஆம் நடைபெறும் தனது மகனின் திருமண அழைப்பிதழை கொடுக்கத்தான் இந்த சந்திப்பு நடந்தது என்று வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். வைத்திலிங்கத்தின் இல்ல திருமண விழாவில் ஓ.பன்னீர்செல்வமும் கண்டிப்பாக வருவார் என்பதால், திருமண விழாவிலேயே சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளையும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர்.

இணைந்து செயல்பட திட்டம்

கடந்த சில நாட்களாக கேரளாவில் மூலிகை சிகிச்சை மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் நேற்று போடிக்கு வந்தார். கட்சி நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் வீட்டு திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின், சென்னை செல்ல உள்ளார். அங்கிருந்து 7 ஆம் தேதி தஞ்சாவூர் செல்ல திட்டமிட்டுள்ளார். திருமண விழாவைத் தொடர்ந்து சசிகலாவுடன் இணைந்து கட்சி பணியில் ஈடுபடுவது குறித்து தனது ஆதரவாளர்களிடம் அவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here