ஹீரோக்களுக்கு இணையான சம்பளத்தை நான் மட்டுமே பெறுகிறேன் என்று நடிகை கங்கனா ரனாவத் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
சாதித்த பிரியங்கா சோப்ரா
பாலிவுட்டில் மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் இருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பிரச்சனை ஹீரோவுக்கு நிகரான சம்பளம் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படுவதில்லை என்பது மட்டுமே. ரூ.100 கோடிகளுக்கு மேல் சில முன்னணி நடிகர்கள் சம்பளம் வாங்குவதாகவும், ஆனால் அதில் 10% கூட ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படுவதில்லை என்றும் நடிகைகள் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். நடிகை பிரியங்கா சோப்ரா தான் ஹீரோக்களுக்கு இணையான சம்பளம் ஹீரோயின்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று பலமுறை வற்புறுத்தி வந்தார்.
நிகரான சம்பளம்
பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சிட்டாடல்’ வெப் தொடரில் ஹீரோக்கு நிகரான சம்பளத்தை பிரியங்கா பெற்றுள்ளதாக தகவல் பரவியது. இந்த வெப் தொடரில் நடித்துள்ள ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ராவுக்கு தலா 10 மில்லியன் டாலர் சம்பளம் என தகவல்கள் வெளியாகின. இது இந்திய ரூபாய் மதிப்புப்படி ரூ.80 கோடி சம்பளம் இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
சம்பள பிரச்சனை
இந்நிலையில் சர்ச்சைக்கு பெயர் போன நடிகை கங்கனா ரனாவத், பிரியங்கா சோப்ராவின் பழைய பேட்டியை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; “ஆண்களுக்கு இணையான சம்பளம் கொடுக்கப்படவில்லை என்று பிரியங்கா சோப்ரா கூறியது உண்மைதான். எனக்கு முன்னால் இருந்த நடிகைகள் இந்த ஆணாதிக்க விதிகளுக்கு அடிப்படிந்தனர். ஆண்களுக்கு இணையான சம்பளம் வேண்டும் என்று முதலில் சண்டையிட்டது நான் தான். அப்போது நான் எதிர்கொண்ட மிகவும் அருவருப்பான விஷயம் என்னவென்றால், என்னுடைய சக நடிகைகள் நான் பேரம் பேசிய கதாபாத்திரங்களில் இலவசமாககூட நடித்துக்கொடுத்தனர். திரைத்துறையில் ஆண் நடிகர்களுக்கு இணையான சம்பளம் வாங்குவது நான் மட்டும் தான் என்று அனைவருக்கும் தெரியும்” என்று நடிகை கங்கனா ரனாவத் கூறியிருக்கிறார்.