ஆஷிஷ் வித்யார்த்தி என்னை ஒரு போதும் ஏமாற்றியது கிடையாது என அவரது முதல் மனைவி ரஜோஷி பருவா கூறியுள்ளார்.
அசத்தல் நடிப்பு
1992 ஆம் ஆண்டு பாலிவுடில் சர்தார் என்ற படத்தின் மூலம் ஆஷிஷ் வித்யார்த்தி நடிகராக அறிமுகமானார். ஆனால் அந்த திரைப்படம் லேட்டாக ரிலீஸ் ஆனதால், த்ரோகால் திரைப்படம் முதலில் ரிலீஸ் ஆனது. இவரது முதல் படத்திலேயே சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். பிறகு இவருக்கு பல மொழிகளில் நடிக்கும் வாய்ப்பு குவிந்தது. அந்த வகையில் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ் என பல மொழிகளிலும் நடித்து அசத்தினார்.
தமிழில் அறிமுகம்
தமிழில் தில் படத்தின் மூலம் அறிமுகமானார் ஆஷிஷ் வித்யார்த்தி. தரணி இயக்கத்தில் விக்ரம் நடித்த இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்த படத்திற்குப் பிறகு தமிழில் அதிக வாய்ப்புக்கள் குவியத் தொடங்கியது. 2002 ஆம் ஆண்டு பாபா படத்தில் நடித்திருந்த இவருக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்த பிறகு ஏழுமலை, தமிழ், பகவதி, தமிழன் என்று அந்த வருடம் மட்டுமே ஐந்து படங்களில் நடித்து வேற லெவல் ஹிட் கொடுத்தார். தரணி இயக்கத்தில் விஜய் நடித்து சூப்பர் ஹிட் ஆன கில்லி திரைப்படத்திலும் விஜய்க்கு அப்பாவாக நடித்து அசத்தினார். போலீஸ் அதிகாரியாக இவரது நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. கடைசியாக இவர் தமிழில் என் வழி தனி வழி என்ற படத்தில் நடித்திருந்தார்.
இரண்டாவது திருமணம்
ஆஷிஷ் வித்யார்த்தி பழம்பெரும் நடிகையான சகுந்தலா பருவாவின் மகளான ராஜோஷி பருவாவை திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில வருடங்களுக்கு முன் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார் ஆஷிஷ். இந்நிலையில் சமீபத்தில் அசாமைச் சேர்ந்த ரூபாலி பருவா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலானது.
முதல் மனைவி உருக்கம்
இந்த நிலையில், அவரது முன்னாள் மனைவி ரஜோஷி பருவா தங்கள் பிரிவு குறித்து பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது; ”’நானும் ஆஷிஷும் கடந்த 2021-ல் விவாகரத்து பெற்றோம். அதை நாங்கள் வெளி உலகிற்கு பிரபலப்படுத்த விரும்பவில்லை. ஆஷிஷுடனான எங்களுடைய 22 ஆண்டு கால வாழ்க்கை மிக சந்தோஷமானது. எங்களுக்குள் நிறைய ஒற்றுமையும் உண்டு, வேற்றுமையும் உண்டு. ஆனால், நாங்கள் அதன் நிமித்தமாக ஒருபோதும் மோதிக் கொண்டதில்லை. ஒரு கலைஞராக நான் விரும்புவதை செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. என் தேவை என்னவென்பதை உணர்ந்தபோது, ஆஷிஷின் எதிர்கால தேவைகளும், என்னுடைய தேவைகளும் வெவ்வேறு என புரிந்தது. அதுதான் எங்களுடைய பிரிவுக்கு காரணமாக இருந்தது.
சண்டைகள் இல்லை
எங்களுடைய மகன் ஆர்த் வித்யார்த்தி, இப்போது வெளிநாட்டில் டெஸ்லா நிறுவனத்தில் வேலை செய்கிறார். பொதுவாகவே குழந்தையை வளர்ப்பதில் மனைவி தான் பெரும் பங்காற்றுவார்கள். ஆனால் எங்கள் மகனை வளர்த்ததில் ஆஷிஷுக்குதான் பெரும் பங்கு இருக்கிறது. ஆர்த் எங்களுக்குள் ஏற்பட்ட பிரிவு உள்ளிட்ட அனைத்தையும் நன்றாக புரிந்து கொண்டார். வழக்கமாக விவாகரத்தில் ஈடுபடும் தம்பதிகளுக்கு நடுவே பல சண்டைகளும், மனக்கசப்புகளும் நடக்கும். ஆனால் எங்கள் விவாகரத்தில் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இரண்டு ஆண்டுகளாக நாங்கள் வெவ்வேறு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். அவர் இப்போது இன்னொரு திருமணம் செய்துள்ளார். அதற்காகத் தான் அவர் என்னை விவாகரத்து செய்தார் போன்ற பேச்சுக்கள் முட்டாள் தனமானவை. அவர் எப்போதும் என்னை ஏமாற்றியதில்லை.
திருமணம் தேவை இல்லை
அதேபோல் நானும் இன்னொரு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏனென்றால் என் தேவை திருமணம் இல்லை. அவருக்கு துணை தேவைப்பட்டதால் மற்றொரு திருமணம் செய்துகொண்டார். நான் என் வாழ்நாளின் பெரும் பகுதியை சகுந்தலா பாருவாவின் மகளாகவும், ஆஷிஷ் வித்யார்த்தியின் மனைவியாகவும் கடந்துவிட்டேன். இப்போது என் வழியில் செல்கிறேன். நான் இப்போது என் அடையாளத்தை வேறு பாதையில் தேடுகிறேன்’ என்று ரஜோஷி பருவா கூறினார்.















































