பாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் உன்னி முகுந்தனுக்கு எதிராக தீர்ப்பளித்து ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் குற்றச்சாட்டு
மலையாள திரையுலகில் பிரபலமாக இருக்கக்கூடியவர் நடிகர் உன்னி முகுந்தன். 10 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வரும் உன்னி முகுந்தன் மீது இளம் பெண் ஒருவர், ஒரு படத்தில் நடிக்க வைப்பதாகவும், கதையைக் கேட்க தன் வீட்டுக்கு வருமாறு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் போலீசில் புகார் அளித்தார். கோட்டயத்தை சேர்ந்த அந்த இளம் பெண்ணின் புகாரின் பேரில் காவல்துறையினர் நடிகர் உன்னி முகுந்தன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ரூ.25 லட்சம் கொடுத்தால் புகாரை வாபஸ் பெறுகிறேன் என அந்தப் பெண் கூறியதாகவும், பணத்திற்காக தான் தவறான புகார் அளித்துள்ளார் என்றும் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார் உன்னி முகுந்தன். அதன்பின் இவருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு கோர்ட் தடை விதித்தது.
மனு தள்ளுபடி
இதனிடையே அந்தப் பெண்ணிடம் சமரசம் பேசி தீர்வு கண்டுவிட்டதாக உன்னி முகுந்தன் வழக்கறிஞர் கோர்ட்டில் தெரிவித்து விசாரணைக்கு தடை கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால், எந்த ஒரு சமரசமும் ஏற்படவில்லை எனவும், உன்னி முகுந்தன் தொடர்ந்து தன்னை அவமானப்படுத்துவதாகவும் சம்மந்தப்பட்ட பெண் கோர்ட்டில் கூறியிருந்தார். இதுபற்றி விசாரித்த கோர்ட் உன்னி முகுந்தன் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. அது மட்டும் இல்லாமல் அவருக்கு எதிரான வழக்கு விசாரணை தொடர்ந்து நடத்தவும் அறிவித்துள்ளது. இந்த தீர்ப்பு தற்போது மலையாள சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.