நடிகை நயன்தாரா அகஸ்தியா திரையரங்கை வாங்கவில்லை என்று தியேட்டர் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
குறைந்த படவாய்ப்புகள்
தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய நடிகை நயன்தாரா தற்போது தனது 75 வது படத்திலும், ஹிந்தியில் அட்லீ இயக்கும் ஜவான் படத்திலும் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர் . இந்நிலையில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இணைந்து வட சென்னையில் இருக்கும் அகஸ்தியா திரையரங்கை வாங்கி இருக்கிறார்கள் என்றும் அந்த தியேட்டரை இடித்துவிட்டு மல்டிபிளக்ஸ் ஒன்றை கட்ட இருக்கிறார்கள் என்றும் சமீபத்தில் தகவல் வெளியானது. சமூக வலைதளத்தில் இது பற்றிய தகவல் தீயாகப் பரவிய நிலையில் திரையரங்க நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
நிர்வாக விளக்கம்
திரையரங்க நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அகஸ்தியா திரையரங்க நிர்வாகம், அகஸ்தியா திரையரங்கம் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருவதால் அதனை யாருக்கும் விற்க முடியாது என்றும் நயன்தாரா இந்த இடத்தை வாங்கி விட்டார் என்று வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை” என்றும் கூறியுள்ளனர். திருமணத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடிக்கு சரியான பட வாய்ப்புகள் அமையாததால் திரையரங்கை வாங்கி பிசினஸில் ஈடுபடலாம் என்ற ஐடியாவில் நயன்தாரா அந்த திரையரங்கை வாங்கினார் என்று தகவல் வெளியானது. ஆனால் வெளியான தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்று தற்போது தெரியவந்துள்ளது.