மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொடுத்த சிறப்பு பரிசை பற்றி வீடியோ ஒன்றில் கூறியுள்ளார் நடிகை உமா ரியாஸ்.
பிரபலமான நடிகை
1984 ஆம் ஆண்டு அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் உமா ரியாஸ் கான். அதன்பிறகு அன்பே சிவம், மௌனகுரு, அம்புலி, பிரியாணி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான டி ப்ளாக், ஆதார் உள்ளிட்ட திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 1992 ஆம் ஆண்டு ரியாஸ் கானை திருமணம் செய்துகொண்டார். தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் இவர், திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் சீரியல்களிலும் நடித்து வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா, ராஜா ராணி 2, சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம், கயல் உள்ளிட்ட தொடர்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரியாலிட்டி ஷோகளிலும் பங்கேற்று வரும் உமா ரியாஸ் கான், விஜய் டிவியின் பிரபலமான குக் வித் கோமாளி, பிக் பாஸ் ஜோடிகள் மற்றும் ஊ சொல்றியா ஊஹு சொல்றியா உள்ள நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உள்ளார்.
ஜெயலலிதாவின் பரிசு
சினிமா, நடிப்பு என ஒரு பக்கம் இருந்தாலும் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார் உமா ரியாஸ். தனது யூடியூப் சேனலில் அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், ஃபிட்னஸ், ஷாப்பிங் என பல வீடியோக்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் சமீபத்தில் சாரீஸ் கலெக்ஷன் என்று தன்னிடம் உள்ள புடவைகளை அனைத்தையும் ரசிகர்களுக்கு காட்டி ஒவ்வொரு புடவையும் எங்கே வாங்கியது எவ்வளவு விலை கொடுத்து வாங்கியது உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு வந்தார். அந்த வீடியோவில் ப்ளூ கலர் புடவையை காட்டி, இது எனக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பரிசாக கொடுத்தார்கள் என்று கூறியிருந்தார். ஜெயலலிதா பங்கேற்ற நிகழ்ச்சியில் பரதநாட்டியம் ஆடிய போது எங்களுக்கு பரிசாக கொடுத்தார். இதனை ஞாபகமாக வைத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் உமா ரியாஸ். இவரது இந்த வீடியோ பலபேரின் கவனத்தை ஈர்த்ததுடன் அடுக்கடுக்கான கமெண்ட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.