நடிகரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நண்பருமான நடிகர் சரத்பாபு காலமானார்.
ஹீரோவாக சரத் பாபு
1973 ஆம் ஆண்டு ராம ராஜ்ஜியம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமான நடிகர் சரத்பாபு, 1977 ஆம் ஆண்டு பட்டினப்பிரவேசம் என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். அதன்பிறகு நிழல் நிஜமாகிறது, வட்டத்துக்குள் சதுரம், உயிர் உள்ளவரை, முள்ளும் மலரும், முடிசூடா மன்னன் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்தார். 70களில் தனது திரைப்பயணத்தை துவங்கிய சரத்பாபு தமிழில் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தார். அந்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தராததால், இரண்டாம் நிலை கதாநாயகராக நடிக்கத் தொடங்கினார். விஜயகாந்த், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், சிரஞ்சீவி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் சரத்பாபு.
குணச்சித்திர கதாபாத்திரம்
முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த சரத்பாபு, முத்து, அண்ணாமலை உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். ஆளவந்தான், புதிய கீதை, பேரரசு, கள்வனின் காதலி என்று இவரது நடிப்பில் வெளிவந்த ஹிட் படங்கள் ஏராளம். சமீபத்தில் வெளியான வசந்த முல்லை என்ற படத்தில் டாக்டராக நடித்திருந்தார் சரத்பாபு.
சரத்பாபு மறைவு
நடிகர் சரத்பாபு 1974 ஆம் ஆண்டு ரமா பிரபா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக 1988 ஆம் ஆண்டு விவாகரத்தும் பெற்றனர். அதன்பிறகு 1990 ஆம் ஆண்டு சினேகா நம்பியார் என்பவரை திருமணம் செய்துகொண்ட சரத்பாபு, மீண்டும் 2011 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். 71 வயதாகும் சரத்பாபு ஹைதராபாத்தில் இருக்கும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நடிகர் சரத்பாபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. அவரது மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.