நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் நாளை வெளியாக இருக்கும் ” யாதும் ஊரே யாவரும் கேளிர்” திரைப்படம் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.
அசத்தும் விஜய் சேதுபதி
தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய் சேதுபதியின் வளர்ச்சி சினிமாவில் அசுர வளர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் இவர் நடிப்பில் வெளியான சில படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், தொடர்ந்து பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்து தற்போது முன்னணி நடிகர்கள் லிஸ்டில் இருந்து வருகிறார். ஹீரோவாக மட்டுமில்லாமல் குணச்சித்திர கதாபாத்திரத்திலும், வில்லனாகவும் நடித்து அசத்தி வருகிறார். கடந்தாண்டு இவர் நடிப்பில் வெளியான விக்ரம், மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் சூரி ஹீரோவாக நடித்து வெளியான “விடுதலை 1” திரைப்படத்திலும் இவரது கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மத்தியில் பெருமளவு பாராட்டப்பட்டது.
பாராட்டு மழையில் விஜய் சேதுபதி
தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் அசத்தி வந்த நடிகர் விஜய் சேதுபதி, தற்போது ஹிந்தியில் “ஜவான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் ஷாருக் கான் ஹீரோவாகவும், நயன்தாரா ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இவர் நடிப்பில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எஸ். இசக்கி துரை தயாரிப்பில், வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. சென்னையில் நடைபெற்ற சிறப்பு காட்சியில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்தை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆர். நல்லகண்ணு, மகேந்திரன் மற்றும் மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி ஆகியோர் கண்டு ரசித்தனர். சிறப்பு காட்சிக்கு பின்னர் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நல்லகண்ணு, மகேந்திரன் மற்றும் திருமுருகன் காந்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்தை அவர்கள் பெரிதும் பாராட்டினர். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்தின் டிரெய்லர் ஏற்கனவே பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில், திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.