தமிழ்நாடு அமைச்சரவையில் பிடிஆர் தியாகராஜன் உட்பட 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது.
அமைச்சரவை மாற்றம்
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021 மே 7 ஆம் தேதி பொறுப்பேற்றது. திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்து, 3 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த சூழலில், கடந்த சில வாரங்களாகவே அமைச்சரவை மாற்றம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின.
புதிய பொறுப்பு
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கவனித்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நாசரிடமிருந்து பறிக்கப்பட்ட பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மனோ தங்கராஜ் கவனித்த தகவல் தொழில்நுட்பத்துறை பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தங்கம் தென்னரசுவிடம் இருந்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.