இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய புயல்

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று 6 ஆம் தேதி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியது. இதன் காரணமாக அப்பகுதிகளில் 8 ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது 9 ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்.

கனமழை

இதன்காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, கரூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இடி மின்னலுடன் மழை

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப் படுகிறார்கள். ஆழ் கடலில் உள்ள மீனவர்கள் நாளைக்குள் (ஏப்.07.,) கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்” என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here