கேரளாவில் உள்ள மசூதி ஒன்றில் இந்து முறைப்படி நடைபெற்ர திருமண வீடியோவை பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அதனை வெகுவாக பாராட்டியுள்ளார்.
சர்ச்சைக்குரிய படம்
தி கேரளா ஸ்டோரி படத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அந்த படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய 10 காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதா சர்மா, சித்தி இத்லானி, பிரணவ் மிஷ்ரா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை, பாலிவுட் இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கி உள்ளார். மே 5ம் தேதி பான் இந்தியா படமாக தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகிறது.
அதிர்ச்சிகரமான தகவல்
கேரளாவில் அதிகபட்சமாக 32000 இந்து பெண்கள் இஸ்லாம் மதத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் காதலித்து அவர்களை மதமாற்றம் செய்து பின்னர் வெளிநாட்டுக்கு கூட்டிச் சென்று ஐஎஸ் தீவிரவாதிகளாக மாற்றுகின்றனர் என்கிற அதிர்ச்சிகரமான தகவல்களை சுதிப்தோ சென் இந்த படத்தில் சுட்டிக் காட்டி உள்ள நிலையில், இந்த படம் மதக் கலவரத்தை உண்டாக்கும் எனக் கூறி கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. தி கேரளா ஸ்டோரி படத்தை ரிலீஸ் செய்ய கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சர்ச்சைக்குரிய 10 காட்சிகளை தணிக்கை துறை நீக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருமண பதிவு
இந்த சமயத்தில், கேரளாவை சேர்ந்த இடதுசாரி கொள்கை கொண்ட ஒரு நபர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கல்யாண பதிவை வெளியிட்டுள்ளார். இதுவும் “கேரளா ஸ்டோரி” தான் என பதிவிட்டுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு, கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த அஞ்சு என்பவர் குடும்ப ஏழ்மையில் வாடும் போது, அஞ்சுவின் தாய் அங்குள்ள மசூதியில் திருமணம் நடத்த உதவி கோரியுள்ளார். உடனடியாக, செருவாளி மசூதி முஸ்லிம் ஜமாத் கமிட்டியினர் உதவி செய்ய முன் வந்தனர்.
இசைப்புயல் பாராட்டு
மசூதியில் அஞ்சுவின் திருமணம் இந்து முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் இந்து – முஸ்லீம் என்ற மத பேதமின்றி பலர் கலந்துகொண்டனர். அங்கு இந்து முறைப்படி சைவ சாப்பாடு பரிமாறப்பட்டது. மேலும், திருமண சீதனமாக 10 பவுன் தங்க நகையும், 2 லட்சம் ரூபாய் பணமும் அந்த கமிட்டி கொடுத்திருந்தார்கள். ஏழை பெண்ணுடைய திருமணத்தை நடத்தி வைத்த ஜமாத் கமிட்டிக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்கள். இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், மனிதகுலத்தின் மீதான அன்பு நிபந்தனையற்றதாகவும், அனைத்தையும் சரி செய்ய கூடியதாகவும் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.