முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் எனது ரோல் மாடல் என்று நடிகை திரிஷா கூறியுள்ளார்.
கச்சிதமான நடிகர்கள்
அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து படமாக உருவாக்க பல முன்னணி இயக்குநர்கள் முயற்சித்தும் முடியாத நிலையில், இதனை சாத்தியமாக்கி இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். புத்தகத்தில் மட்டுமே படித்து வந்த கதாபாத்திரங்கள் நேரில் அமைந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அத்தனை கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுக்கும் விதமாக ஆதித்த கரிகாலன், அருண்மொழி வர்மன், வந்தியத்தேவன், நந்தினி, குந்தவை, சுந்தரச் சோழர், பூங்குழலி, வானதி, அனிருத்த பிரம்மராயர், ஆழ்வார்க்கடியான் நம்பி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், வீரபாண்டியன், ரவி தாசன், ஊமை ராணி என அணைத்து கதாபாத்திரங்களின் நடிகர்களையும் கச்சிதமாக தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
குந்தவை திரிஷா விளக்கம்
பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவியாக நடித்துள்ள திரிஷா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார். அதற்கு காரணம் அவருடைய நடை, உடை, பாவனை, அனைத்தும் என்று சொன்னால் அது மிகையாகாது. படம் வெளிவருவதற்கு முன்பே திரிஷாவை பார்த்த ரசிகர்கள் பிரமிப்படைந்தனர். சமீபத்தில் திரிஷா அளித்த பேட்டி ஒன்றில், “இந்த படத்தில் நான் குந்தவை எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த கதாபாத்திரத்துக்கு உதாரணமாக மணிரத்தினம் என்னை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை உதாரணமாக எடுத்துக் கொள்ளச் சொன்னார். ஜெயலலிதாவின் நடை, பேச்சு, நிர்வாகத்திறன் போன்ற அனைத்தையும் நான் முன் உதாரணமாக எடுத்துக் கொண்டேன். எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் இருப்பார் ஜெயலலிதா. அதுதான் குந்தவை கதாபாத்திரத்தில் குணாதிசயம் என்றும் கூறினார். இந்த அனைத்து தன்மைகளையும் நான் முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டேன்” என்று திரிஷா கூறியுள்ளார்.