நடிகர் அஜித் பட தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி புற்றுநோய் பாதிப்பால் காலமானார்.
அஜித்தின் வெற்றி
தமிழில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய அஜித்துக்கு ஆரம்ப காலத்தில் சூப்பர்ஹிட் படமாக அமைந்த ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், வில்லன் உள்ளிட்ட படங்களை தயாரித்த நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி கேன்சர் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரிப்பில் அஜித் மொத்தம் ஒன்பது படங்கள் நடித்துள்ளார். முதன்முதலில் ராசி என்ற படத்தில் இணைந்த இந்த கூட்டணி வாலி, முகவரி, வில்லன், ஆஞ்சநேயா, ஜி, வரலாறு உள்ளிட்ட பல படங்களில் ஒன்று சேர்ந்தது. அஜித்துக்கு மட்டும் இல்லாமல் விக்ரம் நடித்த காதல் சடுகுடு, சிம்புவின் காளை, வாலு படங்களையும் தயாரித்துள்ளார் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி.
பெரும் சோகம்
சில நாட்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த எஸ்.எஸ் சக்கரவர்த்தி, சிகிச்சையில் இருந்து வந்தார். ஆனால் தற்போது சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இவரின் இழப்பு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தயாரிப்பாளராக மட்டுமில்லாமல் கடந்த ஆண்டு விமல் நடிப்பில் வெளியான விலங்கு என்ற வெப் தொடரில் போலீஸாக நடித்திருந்தார். அதன்பிறகு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகின்றது. அஜித்தை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளதால், எஸ்.எஸ் சக்கரவர்த்திக்கு அஜித்தின் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.