நடிகை ஜியா கான் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் நடிகர் சூரஜ் பஞ்சோலியை விடுதலை செய்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரசிகர்களை கவர்ந்த நடிகை

1988 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்த ஜியா கான், பாலிவுட் சினிமா மீதான ஆசையால் நடிக்க வாய்ப்பு தேடி மும்பை வந்தார். 2007ம் ஆண்டு இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான நிஷாபத் படத்தில் நடிகையாக அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த ஜியா கான், அந்த ஆண்டின் சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டார். பின்னர் 2008 ஆம் ஆண்டு இந்தி மொழி கஜினி படத்தில் நடித்து மீண்டும் பிரபலமானார். அதனைதொடர்ந்து 2010 ஆம் ஆண்டு வெளியான ஹவுஸ்புல் திரைப்படம் ஜியா கானை, பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்றது.

மரணம்

இந்த நிலையில், 2013 ஆம் ஆண்டு நடிகை ஜியா கான் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகை ஜியா கான் தற்கொலை செய்து கொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டார் என்று அவரது தாயார் ராபியா கான் போலீஸில் வாக்குமூலம் அளித்தார். மேலும் நெருக்கமான ஒருவரால் அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் ராபியா கான் குற்றம்சாட்டியிருந்தார்.

விடுதலை

இதையடுத்து நடிகை ஜியா கானின் காதலன் நடிகர் சூரஜ் பஞ்சோலி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், 2014 ஆம் ஆண்டு இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. 10 ஆண்டுகளாக நடந்த வழக்கு விசாரணையின் இறுதிகட்ட வாதங்கள் அண்மையில் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்குவதாக சிபிஐ நீதிமன்றம் அறிவித்திருந்தது. அதன்படி ஜியா கான் மரண வழக்கில், நடிகர் சூரஜ் பஞ்சோலி குற்றமற்றவர் எனத் தெரிவித்த நீதிமன்றம், அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here