ஆருத்ரா கோல்டு நிறுவன வழக்கில் நடிகர் ஆர்.கே. சுரேஷ் உட்பட 4 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மோசடி

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்ததை நம்பி லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர். ஆனால், அந்நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்பச் செலுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் அளித்த புகார்கள் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில் குமார், நாகராஜ், அய்யப்பன், ரூசோ, பாஜக நிர்வாகி ஹரிஷ், மாலதி, ராஜா உள்ளிட்ட 11 பேர் பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

லுக் அவுட் நோட்டீஸ்

ஆருத்ரா வழக்கில் பாஜகவின் ஓபிசி பிரிவு மாநிலத் துணைத் தலைவரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர். ஆருத்ரா மோசடி வழக்கில் தனக்கு தெரிந்தவர்களைக் காப்பாற்ற அவர் முயற்சி செய்தும், அவர்களுக்கு உதவியும் வந்ததாகத் தகவல் வெளியானது. கைது செய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து ஆர்.கே.சுரேஷ் வங்கிக் கணக்கிற்கு பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியும் ஆர்.கே.சுரேஷ் ஆஜர் ஆகவில்லை. இந்நிலையில் தற்போது ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட 4 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here