சினிமாவிற்கு மொழி முக்கியமில்லை, மக்களின் சந்தோஷம் தான் முக்கியம் என்று நடிகை ஆதிதி ராவ் கூறியுள்ளார்.

குறிப்பிட்ட சில படங்கள்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘காற்று வெளியிடை’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமானவர் அதிதி ராவ் ஹைதரி. இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். அதன்பிறகு செக்கச் சிவந்த வானம், சைக்கோ, ஹே சினாமிகா உள்ளிட்ட சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்த அதிதி ராவுக்கு, ஏராளமான ரசிகர்கள் உண்டு.

கலவையான விமர்சனம்

ஹிந்தியில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர், தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் வெளியான ஹே சினாமிகா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. நடன இயக்குநரான பிருந்தா இயக்கியிருந்த இந்த திரைப்படத்தில், துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சை தேவையற்றது

இந்நிலையில், அதிதியிடம் தென்னிந்திய திரைப்படங்கள், ஹிந்தி படங்கள் என்று பாகுபாடு எப்பொழுதும் வலுத்து வருவது குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அதிதி, “ஹிந்தி படங்கள் தென்னிந்திய படங்கள் என்ற மொழி பேத சர்ச்சை தேவையற்றது. என்னை பொறுத்தவரை எனக்கு இந்த பேதங்கள் எதுவும் இல்லை. உண்மையில் சினிமாவிற்கு மொழி பேதமே இல்லை. நாம் நம் மக்களுக்காக படங்களை எடுக்கின்றோம். எந்த மொழியில் செய்தாலும் சினிமாவில் இறுதி லட்சியம் ரசிகர்களை சந்தோஷப்படுத்துவது தான்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here