சமூக வலைதளங்களில் உலா வரும் ஆடியோவில் உள்ள குரல் என்னுடையது அல்ல என்றும் அது ஜோடிக்கப்பட்டது என்றும் தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். 
வெளியான ஆடியோ
திமுக அரசின் ஊழல் குறித்து தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் ஊழல் மூலம், ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக சம்பாதித்ததாக கூறப்பட்டிருந்தது. இந்த ஆடியோ விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
என்னுடையது அல்ல
இதுகுறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது; “திமுக தொடங்கியதில் இருந்து ஒரே இயக்கம், ஒரே கட்சி, ஒரே குடும்பம் என அனைவரும் ஒற்றுமையாக இயங்கி வருகிறோம். சமூக வலைத்தளத்தில் பரவி வரும் ஆடியோவில் உள்ள குரல் என்னுடையது இல்லை. ஆடியோ ஜோடிக்கப்பட்டது. நவீன தொழில் நுட்பத்தை மலிவான யுக்திக்காக பயன்படுத்தி இத்தகைய ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளனர். எண்ணங்களை நிறைவேற்ற துடிக்கும் பிளாக் மெயில் கும்பலின் இதுபோன்ற கோழைத்தனமாக முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது.
ஜோடிக்கப்பட்டது
முதலமைச்சரிடம் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவன். இப்படிப்பட்ட ஆற்றல்மிகு செயல் வீரரான அமைச்சர் உதயநிதி குறித்து நான் எப்படி பேசுவேன்? திராவிட மாடல் ஆட்சியில் அமைச்சர்கள் அனைவரும் சாதனைகள் செய்யும் வண்ணம் செயல்பட்டு வருகின்றனர். நான் அரசியலுக்கு வந்தது முதல் எனக்கு நல்ல வழிகாட்டி, ஆலோசகர், உறுதுணையாக இருப்பவர் சபரீசன். அமைச்சர் உதயநிதி, சபரீசன் மீது களங்கம் சுமத்த ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு செய்த சாதனைகளை விட, இரண்டே ஆண்டுகளில் நாங்கள் அதிகம் செய்துள்ளோம்” இவ்வாறு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.















































