சன்னிதானம் PO படத்தின் ஷூட்டிங் சபரிமலையில் நடந்து வருவதால், அங்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் யோகி பாபுவிற்கு கை கொடுத்து மகிழ்ந்தனர்.
ஹீரோவாக யோகி பாபு
தமிழில் காமெடி நடிகராக புகழ் பெற்றவர் நடிகர் யோகி பாபு. ஆரம்ப காலத்தில் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், கோலமாவு கோகிலா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு தர்ம பிரபு, கூர்கா, ஜாம்பி, மண்டேலா, உள்ளிட்ட படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழரசன், யானை முகத்தான் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ள யோகி பாபு, ‘சன்னிதானம் PO’படத்தின் ஷூட்டிங்கில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
கோவிலில் படப்பிடிப்பு
ராஜீவ் வைத்யா இயக்கும் ‘சன்னிதானம் PO’ படத்தை வி வி கே என்டர்டைன்மென்ட், சர்வதார் சினி காரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன் சார்பில் விவேகானந்தர், மதுசூதனன் ராவ் மற்றும் சபீர் பதான் இணைந்து தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாரித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 20 நாட்களாக சபரிமலையில் நடந்து வருகின்றது. கடந்த சனிக்கிழமை முதல் படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகிறார் யோகிபாபு. ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் வழியில் படப்பிடிப்புகள் நடந்து வருவதால், அங்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த ஐயப்ப பக்தர்கள் பலர் யோகி பாபுவை பார்த்து கை கொடுத்து மகிழ்ந்தனர். யோகி பாபுவும் எந்த ஈகோவும் இல்லாமல் ரசிகர்களுக்கு காய் கொடுத்து மகிழ்ந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது.















































