பிச்சைக்காரன் 2 படத்திற்கு எதிராக திட்டமிட்டு வழக்குகள் போடப்படுவதாக நீதிமன்றத்தில் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
பன்முக திறமையாளர்
சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக சினிமா துறைக்கு அறிமுகமான விஜய் ஆண்டனி, ஹீரோவாகவும் வெற்றி பெற்றுள்ளார். இசையமைப்பாளராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பாடகராகவும், தமிழ் சினிமாவை மிரட்டி வருகிறார் விஜய் ஆண்டனி. நான் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர், தனது முதல் படத்திலேயே திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அந்த வெற்றிக்கு பிறகு பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது.
அசத்தல் நடிப்பு
2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம், விஜய் ஆண்டனியின் மார்க்கெட்டையே திருப்பி போட்டது. சசி இயக்கத்தில் வெளியான இந்த படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் லாபத்தை பெற்று தந்தது. அந்த படத்திற்குப் பிறகு சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன், கொலைகாரன், கோடியில் ஒருவன் என்று பல படங்களில் நடித்த விஜய் ஆண்டனி, தற்போது பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
திட்டமிட்ட சதி
இந்நிலையில், பிச்சைக்காரன் 2 படத்தின் கதை 2016-ல் தங்கள் அதயாரிப்பில் வெளியான ‘ஆய்வுக்கூடம்’ படத்திலிருந்து திருடப்பட்டதாக கூறி ராஜகணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் ஆண்டனி தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது; ஆய்வுக்கூடம் படத்திற்கும் பிச்சைக்காரன் 2 படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஏற்கனவே பிச்சைக்காரன் 2 படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனதால் நஷ்டத்தில் உள்ளேன். இதனால் கடும் மன உளைச்சலில் இருக்கிறேன். திட்டமிட்ட இப்படத்தீற் எதிராக தடை வழக்குகள் போடப்படுகின்றன: என அதில் கூறப்பட்டுள்ளது.