பெயர் மாற்றியதன் காரணத்தால் நடிகை திரிஷா, நடிகர் ஜெயம் ரவியின் ப்ளூ டிக்கை டுவிட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.
ப்ரோமோஷன் பணிகள் தீவிரம்
தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்ணனி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் திரிஷா. தற்போது அவர் கைவசம் பொன்னியின் செல்வன் 2, லியோ ஆகிய படங்கள் உள்ளன. இதில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில், லியோ படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொன்னியின் செல்வன் 2 பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளதால், இப்படத்தின் குழுவினர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர சமூக வலைதளங்களிலும் புரோமோஷன் செய்து வருகின்றனர்.
பதறிய திரிஷா
பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரிலீஸ் ஆன போது நடிகை திரிஷா டுவிட்டரில் தனது பெயரை குந்தவை என மாற்றினார். அதேபோல் கார்த்தி வந்தியத்தேவன் எனவும் ஜெயம் ரவி அருண்மொழிவர்மன் எனவும் விக்ரம் ஆதித்த கரிகாலன் எனவும் பெயரை மாற்றி இருந்தனர். தற்போது பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், அதனை புரோமோட் செய்யும் விதமாக நடிகை திரிஷா டுவிட்டரில் தனது பெயரை குந்தவை என மாற்றி இருக்கிறார். அவர் பெயரை மாற்றியதும் அவரது ப்ளூ டிக் பறிக்கப்பட்டுள்ளது. இதனால் ஷாக் ஆன திரிஷா மீண்டும் தனது பெயரை ஏற்கனவே இருந்தபடியே திரிஷ் என மாற்றி இருக்கிறார். அப்படி இருந்தும் அவருக்கு ப்ளூ டிக் மீண்டும் வழங்கப்படவில்லை.
ப்ளூ டிக் பறிப்பு
அதேபோல், நடிகர் ஜெயம் ரவியும் தனது பெயரை மாற்றியதை அடுத்து அவரது ப்ளூ டிக்கும் பறிக்கப்பட்டுவிட்டது. டுவிட்டர் நிறுவனத்தின் புதிய விதிப்படி பெயரை மாற்றினால் ப்ளூ டிக் மறைந்துவிடும். அதனால் திரிஷாவும், ஜெயம் ரவி இருவரின் ப்ளூ டிக்கையும் நீக்கியிருக்கிறது டுவிட்டர் நிர்வாகம்.