நிலவிலிருந்து பார்த்தாலும் தமிழ் என்ற வார்த்தை தெரியும் வகையில் புதிய காடு உருவாக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
புதிய காடு
சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை மானிய கோரிக்கையின் போது பேசிய அமைச்சர் மெய்யநாதன், நிலவிலிருந்து பார்த்தாலும் தமிழ் என்ற வார்த்தை தெரியும் வகையில் புதிய காடு உருவாக்கப்படும் என்றார். இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் காடு ஏற்பாடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மாதிரி காடு உருவாக்கும் திட்டம் இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
திட்டங்கள்
மேலும், ரூ.10 கோடி மதிப்பீட்டில் 50 பள்ளிகளில் கால நிலை மாற்றம் குறித்து அறிய பசுமை பள்ளிக்கூடத் திட்டம். காலநிலை மாற்றம் தொடர்பாக பள்ளிகளில் செயல்படும் சூழல் மன்றங்கள், காலநிலை மன்றங்களாக புதுப்பித்து மாற்றியமைக்கப்படும். பொதுமக்கள் அதிகளவில் கூடும் மையங்களில் சூழலுக்குகந்த பழக்க வழக்கங்களை ஊக்குவிக்க ரூ. 50 லட்சத்தில் சூழலுக்குகந்த வாழ்வியல் சான்றிதழ் வழங்கப்படும். சென்னையில் குப்பை சேகரிப்பவர்களுக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்டார்.