சித்த மருத்துவர் ஷர்மிகாவின் வீடியோவில் கூறிய மருத்துவ அறிவுரைகளைப் பார்த்து சிகிச்சை எடுத்ததில் தங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி 2 பேர் இந்திய மருத்துவ ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய கருத்து
சித்த மருத்துவரான ஷர்மிகா தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். தனியார் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அவர், பல்வேறு சர்ச்சைக்குரிய மருத்துவ குறிப்புகளை வழங்கியதாக கூறப்பட்டது. தினமும் நான்கு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகம் பொலிவாகும், ஒரு குலாப் ஜாமுன் சாப்பிட்டால் ஒரே நாளில் மூன்று கிலோ எடை கூடும், பெண்கள் கவிழ்ந்து படுத்தால் மார்பக புற்றுநோய் உண்டாகும் போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி இருந்தார். இதனைத்தொடர்ந்து, சித்த மருத்துவ கவுன்சில் ஷர்மிகாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து ஷர்மிகா ஜனவரி 24ம் தேதி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி இயக்குநரகத்தில் ஆஜரானார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
புகார்
இந்நிலையில், சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் இரண்டு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சித்த மருத்துவர் ஷர்மிகாவின் மருத்துவ குறிப்பு வீடியோக்களை பார்த்து தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக 2 பேர் இந்திய மருத்துவ ஆணையரகத்திடம் புகார் அளித்துள்ளனர். ஏற்கனவே ஷர்மிகா மீது விசாரணை நடந்து வரும் நிலையில், மேலும் இரண்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.