சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 
புதிய முனையம் திறப்பு
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக இன்று சென்னை வந்தார். ஐதராபாத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வருகை தந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புதிய விமான நிலைய முனையத்தை பிரதமர் திறந்து வைத்துப் பார்வையிட்டார். 
வந்தே பாரத் ரயில்
இதனையடுத்து தனி ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளத்திற்கு சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து சாலை மார்க்கமாக டாக்டர் எம்.ஜி.ஆர். சென்டிரல் ரயில் நிலையம் புறப்பட்டு சென்றார். பின்னர் சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் கலந்துகொண்டனர்.















































