விடுதலை திரைப்படத்தை பார்த்து ரஜினிகாந்த் பாராட்டி பேசிய தருணம் வாழ்க்கை முழுமை அடைஞ்சதா உணர்கிறேன் என்று நடிகர் சூரி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
வெற்றிநடை போடும் படம்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடுதலை. பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த திரைப்படம், கடந்த மார்ச் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
பிரமிப்பு, பெருமை
விடுதலை திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்; “விடுதலை.. இதுவரை தமிழ் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம். சூரியின் நடிப்பு பிரமிப்பு. இளையராஜா இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் தமிழ் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இறைவனுக்கு நன்றி
ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டிய புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் சூரி, “இதுவரை கிடச்ச வாழ்த்துகளுக்கு சிகரமாக வந்தது தலைவர் சூப்பர் ஸ்டாரின் வாழ்த்து. யார பார்த்து பிரமிச்சு சினிமாவுக்கு வரணும்ன்னு நினச்சேனோ அவர் எங்கள் படைப்பையும் உழைப்பையும் பாராட்டி பேசிய தருணம் வாழ்க்கை முழுமை அடைஞ்சதா உணர்றேன். இறைவனுக்கு நன்றி” எனக் கூறியுள்ளார்.