நடிகர் லிவிங்ஸ்டன் தனது மகளை ஹீரோயினாக நடிக்க வைப்பதாகவும், அவரே அப்படத்தை இயக்கப் போவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
ஹிட் படங்கள்
1982 ஆம் ஆண்டு ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ என்ற படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லிவிங்ஸ்டன். வாய்க்கொழுப்பு, பாட்டுக்கு ஒரு தலைவன், நாளை மனிதன், பாட்டுக்கு நான் அடிமை, பத்தினிப்பெண், வீரா என்று ஆரம்ப காலத்திலேயே இவர் பல ஹிட் படங்களை கொடுத்தார். சுந்தர புருஷன், சொல்லாமலே, என் புருஷன் குழந்தை மாதிரி உள்ளிட்ட படங்களில் முன்னணி கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் லிவிங்ஸ்டன். அதுமட்டுமில்லாமல் பூமகள் ஊர்வலம், சுயம்வரம், வாலி உள்ளிட்ட ஹிட் படங்களிலும் நடித்துள்ளார். கூர்கா, அண்ணாத்த, நாய் சேகர், டானாக்காரன், கார்கி, தி லெஜன்ட் உள்ளிட்ட படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.
அறிமுகமாகும் மகள்
தற்போது லிவிங்ஸ்டன் தனது மகளை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சூப்பர் குட் ஃப்லிம்ஸ் ஆர்.பி.சவுத்ரியிடம் கதை கூறியுள்ளார் லிவிங்ஸ்டன். அவர் கூறிய கதை சௌதிரிக்கு பிடித்து உள்ளதாகவும், படத்தை லிவிங்ஸ்டனையே தயாரிக்கவும் கூறி இருப்பதாகவும் கூறுகின்றனர். மேலும் பைனான்ஸ் வேலையை சவுத்ரியே செய்வதாகவும் கூறியிருக்கிறாராம். அது மட்டும் இல்லாமல் தன் மகள் அறிமுகமாகவும் இந்த படத்தில் ஹீரோவாக சவுத்ரியின் மூத்த மகனான ஜித்தன் ரமேஷ் நடிக்க வைப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் கூறுகின்றனர்.