ஹிந்தியில் ரீமேக் ஆகும் லவ் டுடே படத்தில் நடிக்க நடிகர் அமீர் கானின் மகன் ஜூனைத் கான் மற்றும் ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் ஒப்பந்தமாகியுள்ளனர்.
சிறிய பட்ஜெட் பெரிய ஹிட்
பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட் படமாக அமைந்தது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான லவ் டுடே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. பிரதீப் ரங்கநாதன், இவானா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ், ராதிகா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் துணை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருத்தனர். பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படங்களே பல சமயம் காலை வாரிவிடும் சமயத்தில், சிறிய பட்ஜெட்டில் உருவான இந்த படம் வசூலை வாரி குவித்தது. சூட்டோடு சூடாக தெலுங்கில் டப் செய்யப்பட்ட லவ் டுடே திரைப்படம் தெலுங்கு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. சமீபத்தில் நெட்பிளிக்சில் வெளியான இந்த திரைப்படம் அதிலும் முன்னணி இடத்தை பெற்றது.
பிரபலங்களின் வாரிசுகள்
லவ் டுடே படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை சமீபத்தில் பாந்தோம் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. இப்படத்தில் யார் முன்னணி கதாபாத்திரம் நடிப்பார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் கடும் குழப்பம் நிலவி வந்தது. தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. நடிப்புக்கு ஓய்வு கொடுத்து இருக்கும் நடிகர் அமீர் கான் தனது மகனை இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். அமீர்கானின் மகன் ஜூனைத் கான் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லவ் டுடே தமிழில் ஹிட் ஆனது போல் ஹிந்தியிலும் ஹிட் அடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.