பிரதமரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததையடுத்து வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டது.

தகுதி நீக்கம்

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடி பெயர் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் ராகுலுக்கு எதிராக பாஜக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பை வெளியிட்டது. அந்த தீர்ப்பில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி அறிவித்தார். இதையடுத்து ராகுல் எம்.பி. பதவி தொடர்பாக மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்தனர். எம்.பி.க்கள், எம்.எல். ஏ.க்கள் குற்ற வழக்குகளில் 2 அல்லது 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் அவர்களது பதவியை பறிக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் இடம் உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ல் பிரிவு 8 (3)-ன்படி 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக பதவி இழப்பார்கள் என்று வகுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது.

சிறைக்கு செல்வோம்

தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்ட நிபுணர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில்; “ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததற்காக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோருவோம். ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்ய எல்லா வழிகளிலும் பாஜக முயன்றது. தேவைப்பட்டால் ஜனநாயகத்தை காக்க சிறைக்கும் செல்வோம். உண்மையை பேசியதற்காக பழிவாங்கப்படுகிறார் ராகுல் காந்தி” என்று கூறியிருக்கிறார்.

ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சி

ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சியை கண்டிருப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜகவின் பிரதான இலக்காக மாறியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடும் கண்டனம்

பாஜகவின் நடவடிக்கைகள் அனைத்தும் ஜனநாயக படுகொலை என திமுக எம்.பி.கனிமொழி குற்றம்ச்சட்டியுள்ளார். இவ்வளவு அவசரமாக இப்படியொரு தீர்ப்பு வரக்காரணம் என்ன?. வரும் காலங்களில் ராகுல் காந்தியை அரசியலில் இருந்து ஒடுக்கவே பாஜக அரசு இவ்வாறு செயல்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். இதேபோல், புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட எதிர்கட்சியினர் பலர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here