நடிகை ராஷ்மிகா மந்தனா சிறுவயதில் பட்ட கஷ்டங்களையும், பெற்றோர்கள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.
நேஷனல் க்ரஷ்
2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தனா, டியர் காம்ரேட், புஷ்பா போன்ற பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தெலுங்கில் பிரபலமாக இருந்து வந்த இவருக்கு ரசிகர்கள் பட்டாளமே உருவானது. அதன்பிறகே தமிழில் கார்த்தியுடன் இணைந்து சுல்தான் படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை.
முன்னணி நடிகை
நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அதில் இடம் பெற்றிருந்த பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன்பிறகு குட் பை என்ற படத்தின் மூலம் ஹிந்திலும் அறிமுகமானார். தற்போது மிஷன் மஜ்னு என்ற படமும் இவரது நடிப்பில் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் பிரபலமாகி வரும் நடிகை ராஷ்மிகா, அனிமல் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருகின்றது. அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் புஷ்பா 2 படத்திலும் நடித்து வருகிறார். இப்படி பிஸியாக இருக்கும் இவர், சிறுவயதில் பட்ட கஷ்டங்களை வெளிப்படையாக கூறியுள்ளார்.
பொறுப்பாக பேசும் நேஷனல் க்ரஷ்
திரைத்துறையில் உங்களின் வளர்ச்சி குறித்து பெற்றோர் பெருமை கொள்கிறார்களா என்ற கேள்விக்கு ராஷ்மிகா பதில் கூறியுள்ளார். அவர் தெரிவித்ததாவது; “அப்படி ஒன்றும் இல்லை. காரணம், எனது பெற்றோர் சினிமா துறையில் இருந்து விலகியே இருக்கிறார்கள். அவர்களின் மகளாகிய நான் என்ன செய்கிறேன் என்று அவர்கள் அறிந்து கொள்வதில்லை. ஆனால், எனக்கு விருதுகள் கிடைத்தால் அது அவர்களுக்கு பெருமையாக இருக்கும். எனவே, சிறப்பாக செயல்பட்டு விருதுகள் வாங்கி அவர்களை பெருமைபடுத்த வேண்டும் என்பது தான் என் நோக்கம். என்னை அவர்கள் எந்த குறையும் இன்றி வளர்த்தனர். குழந்தையாக இருக்கும்போது அவர்களால் முடிந்த அனைத்தையும் எனக்கு செய்து கொடுத்தனர். அதற்கு நான் நன்றி கடன் பட்டவள். எனவே, இப்போது நான் அவர்களை பார்த்துக்கொள்ள வேண்டிய தருணம். சிறுவயதில் வாடகை கொடுக்க முடியாமல் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வீடு தேடி அலைந்து உள்ளோம். குழந்தையாக இருக்கும் பொழுதிலிருந்தே பெற்றோர் சந்தித்த கஷ்டங்களை நான் உணர்ந்தவள்”. இவ்வாறு உருக்கமாக கூறியுள்ளார் ராஷ்மிகா.