கோவை அருகே வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாயில் காயம்
கோவை மாவட்டம் வெள்ளியங்காடு பகுதியில் சில தினங்களுக்கு முன்பு காட்டு யானை ஒன்று விளைநிலத்தில் நடமாடி வருவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். யானையை விரட்ட வந்த வனத்துறையினர், அந்த யானைக்கு வாயில் காயம் ஏற்பட்டிருப்பதை கண்டனர். யானையின் நடு நாக்கில் வெட்டு காயமும், கீழ் நாக்கும் செயலிழந்துள்ளதால் சாப்பிடும் உணவை உள்ளே தள்ள முடியாத காரணத்தினால் அவதியடைந்துள்ளது.
உயிரிழந்த யானை
இதையடுத்து வாயில் காயத்துடன் சுற்றி திரிந்த காட்டு யானைக்கு கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்க முடிவு செய்து யானைக்கு மயக்க மருந்து கொடுத்தனர். யானைக்கு சிகிச்சை அளித்து வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால், அந்த யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.