தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணா சாலையில் நவீன அம்சங்களுடன் மேம்பாலம் கட்டப்படும் என நிதியமமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

பட்ஜெட்

2023-24ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து 3வது ஆண்டாக காகிதமில்லா நிதிநிலை அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ளார்.

சென்னை சங்கமம்

அவர் நிகழ்த்திய பட்ஜெட் உரையில்; பொருளாதார வளர்ச்சி, சமூக பாதுகாப்பிற்கு, திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. மாநில அரசின் வரி வருவாய் 2020-21ல் 5.58% குறைந்தது; மாநில அரசின் வரி வருவாய் கடந்த 2 ஆண்டில் 6.11%ஆக உயர்ந்துள்ளது. மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசன் ஆகியோருக்கு சென்னையில் நினைவிடம் அமைக்கப்படும். சென்னையில் அனைத்துத் தரப்பு மக்களின் வரவேற்பினைப் பெற்றுள்ள சங்கமம் கலை விழா, வரும் ஆண்டில் மேலும் எட்டு நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.  சங்கமம் கலை விழாவுக்காக வரும் நிதியாண்டில் ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்கான குடியிருப்புகள் கட்ட ரூ.223 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை கிண்டியில் 1000 படுக்கைகளுடன் கூடிய கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டு திறக்கப்படும்.

சர்வதேச புத்தக கண்காட்சி

சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழாக்கள் நடத்தப்படும். சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி வரும் ஆண்டிலும் நடத்தப்படும். மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூலகம் ஜூன் மாதம் வாசகர்களை வரவேற்கும். மதுரை கலைஞர் நூலகத்தில் 3.50 லட்சம் நூல்கள் தமிழ், ஆங்கிலத்தில் இடம்பெறும். அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் சர்வதேச தரத்திலான உலகளாவிய விளையாட்டு மையம் அமைக்கப்படும். ரூ.25 கோடியில் நவீன வசதியுடன் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கம் சீரமைக்கப்படும். அனைத்து சமூக பள்ளிகளும் ஒரேகுடையின் கீழ் கொண்டுவரப்படும்.

சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம்

முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்ட விரிவாக்கத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு. தமிழ்நாட்டின் 18 லட்சம் மாணவர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள். அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சிப்காட் வளாகத்தில் ரூ.80 கோடி மதிப்பில் அதிநவீன திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும். விவசாய கடன் தள்ளுபடி ரூ.2391 கோடி. நகைக் கடன் தள்ளுபடி ரூ.1000 கோடி. சுயதவி குழு கடன் தள்ளுபடி ரூ.600 கோடி என மொத்தம் 3993 கோடி ஒதுக்கீடு. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ரூ.434 கோடியில் வெள்ளத் தணிப்பு தடுப்பு பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

செம்மொழி பூங்கா

கோயம்புத்தூரில் ரூ.175 கோடி மதிப்பீட்டில் 2 கட்டங்களாக செம்மொழி பூங்கா அமைக்கப்படும். ரூ.1500 கோடி மதிப்பீட்டில், 44 கி.மீ தூர அளவிற்கு அடையாறு, கூவம் ஆறுகள் சீரமைப்பு, பூங்காக்கள் உள்ளிட்டவை அமைக்கப்படும். சென்னை பெருநகரில் தனியார் பங்களிப்புடன் கழிவறைகள் கட்டவும், மேம்படுத்தவும் ரூ.430 கோடி ஒதுக்கீடு. சென்னை தீவுத்திடலில் 30 ஏக்கர் பரப்பளவில் பொழுதுப்போக்கு சதுக்கம் மற்றும் திறந்தவெளி திரையரங்கம் ரூ.50 கோடியில் அமைக்கப்படும். சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அண்ணா சாலையில் 4 வழி சாலையாக மேம்பாலம் கட்டப்படும். சர்வதேச நிபுணர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு, நவீன அம்சங்களுடன் இந்த மேம்பாலம் கட்டப்படும். சென்னை கண்ணகி நகர், நாவலூர், பெரும்பாக்கம், அத்திப்பட்டு பகுதியில் ₹20 கோடி செலவில் விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும்.

மெட்ரோ ரயில்

கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் ₹9000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மதுரையில் ₹8500 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். விருதுநகரில் ₹1,800 கோடி மதிப்பீட்டில் 1,150 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்கா ஒன்றிய, மாநில அரசுகள் நிதி பங்களிப்புடன் அமைக்கப்படும். விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்.  இதனால் 22,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். வடபழனி, திருவான்மியூர், வியாசர்பாடியில் உள்ள பேருந்து பணிமனைகள் ₹1600 கோடி செலவில் மேம்படுத்தப்படும். சென்னை, தாம்பரம், ஆவடி, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகராட்சிகளின் முக்கிய பொது இடங்களில் இலவச WiFi சேவைகள் வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here