கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வரும் நடிகை சோனாலி குல்கர்னி பேசிய விஷயங்கள் தற்போது சர்ச்சையானதால் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
தமிழை தவிர பிற மொழிகள்
கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களில் அதிகம் நடிக்கக்கூடிய நடிகை சோனாலி குல்கர்னி, தமிழில் மே மாதம் என்ற படத்தில் நடித்திருந்தார். வினீத் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் மனோரமா, ஜனகராஜ் உள்ளிட்ட பலரும் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதன்பிறகு ஹிந்தி, ஆங்கிலம், மராத்தி, கொரியன் மொழிகளில் அதிகமாக கவனம் செலுத்தி வந்தார். மராத்தி படங்களில் சிறந்த லீட் ரோலுக்கான விருதையும் இவர் பலமுறை பெற்றுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் சோனாலி பேசிய சில விஷயங்கள் சர்ச்சையாக முடிந்துள்ளது.
மன்னித்து விடுங்கள்
நிகழ்ச்சியில் இவர் கூறியிருப்பதாவது, “இந்திய பெண்கள் சோம்பேறிகள். அவர்கள் தங்களது வாழ்க்கையை உற்சாகப்படுத்தி கொள்வதற்கு பதிலாக தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக காதலன், கணவனை தேடுகிறார்கள்” என்று பேசினார். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தான் பேசியதற்காக மன்னிப்பு கேட்டும் அதற்கான விளக்கத்தையும் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், “நான் பேசிய விஷயங்கள் பெண்களை காயப்படுத்துவதற்காக அல்ல. அது என் நோக்கமும் கிடையாது. தனிப்பட்ட முறையில் என்னை தொடர்பு கொண்டு பாராட்டி பேசியவர்களுக்கும், என்னை விமர்சித்தவர்களுக்கும் நன்றி. எனது கருத்தின் மூலம் பெண்கள் மட்டுமின்றி, இங்குள்ள ஒட்டுமொத்த மனித குலத்தையும் சிந்திக்க வைப்பதற்கான முயற்சிகளை செய்தேன். நான் பேசிய கருத்துக்கள் யாரையும் புண்படுத்தி இருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த சம்பவத்திலிருந்து நான் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.