பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என அண்ணாமலை அவரது சொந்த கருத்து என பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை ஆவேசம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றும் அதிமுகவுடன் கூட்டணி என்ற முடிவு எடுக்கப்பட்டால் தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஒரு தொண்டனாக கட்சியில் பணியாற்றுவேன் என்றும் தெரிவித்திருந்தார். அண்ணாமலையின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தனிப்பட்ட கருத்து
இந்த நிலையில், தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என பாஜக மூத்த தலைவரும், திருநெல்வேலி தொகுதி எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்காளிடம் பேசிய அவர், தேர்தல் கூட்டணி குறித்து பாஜகவின் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும் என்றார். தமிழகத்தில் இதுவரை யாரும் தனித்து போட்டியிட்டது கிடையாது என்றும் தனித்து போட்டியிடுவோம் என அறிவிக்கவும் முடியாது. இதுவே தமிழகத்தின் அரசியல் வரலாறு எனவும் அவர் கூறினார்.
அண்ணாமலை திட்டம்
இதனிடையே கூட்டணி விவகாரத்தில் தேசிய தலைமையை சந்திக்க பாஜக தலைவர் அண்ணாமலை முடிவு செய்திருப்பதாகவும் வரும் 26 ஆம் தேதி அவர் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நெட்டா ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.