சென்னையில் நடைபெற்ற ‘செங்களம்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது இயக்குநரும், நடிகருமான அமீர் பேசுகையில்; “இந்திய திரைப்படங்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைப்பதற்கு வாழ்த்துகள். கலைக்கு அரசியல் கிடையாது. அந்த வகையில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு அதுவும் ஒரு இந்திய திரைப்படத்திற்கு முதன்முதலாக ஆஸ்கர் விருது கிடைத்தற்கு வாழ்த்துகள். தற்போது வழங்கப்படும் அனைத்து விருதுகளிலும் அரசியல் இருப்பதாக நினைக்கிறேன். ஆஸ்கர் மட்டுமல்ல. தேசிய விருது, மாநில அரசு விருது, தனியார் நிறுவன விருதுகள் அனைத்திலும் அரசியல் இருப்பதாக கருதுகிறேன். ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘சிவாஜி’ படத்திற்கு சிறந்த நடிகர் ரஜினிகாந்த் என்ற பிரிவில் மாநில அரசின் விருது வழங்கப்பட்டது. மனசாட்சி தொட்டு சொல்ல முடியுமா? ரஜினியை சிறந்த நடிகர் என்று? அவர் சிறந்த என்டர்டெயினர் அதில் மாற்றுகருத்தில்லை. ‘சிவாஜி’ படத்தில் நடிகர் ரஜினியின் நடிப்பை ஒப்பீட்டளவில் பார்க்கும்போது சிறந்த நடிகர் என கூறிவிட முடியாது. அப்படிப் பார்த்தால் ‘முள்ளும் மலரும்’ போன்ற ரஜினியின் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களுக்கு ஏன் அந்த விருது வழங்கப்படவில்லை. விருதுகள் ஒரு லாபியாக மாற்றப்பட்டுவிட்டது” என்றார்.