அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்ததால் கட்சியிலிருந்து 6 மாதம் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக நிர்வாகி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கண்டனத்திற்குரியது
இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம், எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில்; அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக, ஒன்றரை கோடி தொண்டர்களை வழிநடத்துபவர் எடப்பாடி பழனிசாமி. அவருடைய உருவப்படத்தை எரிப்பது என்பது கண்டனத்திற்குரிய விஷயம். அரசியல் கட்சிகளின் தலைவர்களைப் பொறுத்தவரை அக்கட்சித் தொண்டர்கள் உணர்ச்சிவசப்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும். நாங்கள் கிளர்ந்தெழுந்தால் என்ன ஆவது? இதனால் ஏற்படக்கூடிய விபரீதம் வேறு மாதிரி முடியும். எனவே, இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தோம்.
எங்களுக்கும் வித்தைகள் தெரியும்
அவ்வாறு நாங்கள் சொன்னபிறகு, சம்பந்தப்பட்ட நபர்கள் பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், அந்த இடைநீக்கத்தை ஏன் ரத்து செய்தீர்கள்? அப்போது நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன வெறும் கண்துடைப்பா? நான் திரும்பவும் சொல்கிறேன். கொழுந்துவிட்டு எரிகின்ற தீயில் எண்ணெய்யை ஊற்றாதீர்கள், அது நல்லதல்ல. பாஜக உடனான கூட்டணியைப் பொறுத்தவரையில் தொடர்கிறது. அதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. ஆனால், கட்சியில் உள்ளவர்களை கட்டுப்படுத்த வேண்டியது யார் பொறுப்பு, கட்சித் தலைமையினுடைய பொறுப்பு இல்லையா? பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடக் கூடாது. இதுபோல நீங்கள் செய்தால், எங்களுக்கும் இதுபோல பல வித்தைகள் தெரியும். நாங்களும் கண்டிப்பாக எதிர்வினை ஆற்றுவோம். இடைக்காலப் பொதுச் செயலாளர் உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகிகள் மீதான இடைக்கால நீக்கத்தை ரத்து செய்தால், அவர்கள் செய்த செயலை ஊக்கப்படுத்துவது போலத்தானே இருக்கிறது. எனவே, அந்த செயல் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு டி. ஜெயக்குமார் கூறியுள்ளார்.