தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கட்டுப்பாடுகளுடன் இன்று தொடங்கியது.
பொதுத் தேர்வு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்று வரும் பிளஸ்-2 பொதுத் தேர்வில் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதுகின்றனர். 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ – மாணவிகளும், 23 ஆயிரத்து 747 தேர்வு எழுதுகின்றனர். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறுகிறது. முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை படித்து பார்ப்பதற்கும், அடுத்த 5 நிமிடங்கள் தேர்வர்களின் விவரங்களை சரிபார்ப்பதற்கும், பின்னர் தொடர்ந்து 3 மணி நேரம் தேர்வை எழுதுவதற்கும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தீவிர கண்காணிப்பு
தேர்வு அறைகளில் போதிய மின்சார வசதி, குடிநீர் வசதி, இருக்கை வசதி ஆகியவை செய்து தரப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் இந்த தேர்வை கண்காணிக்க பொறுப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். முதல் நாளான இன்று தமிழ் தாள் தேர்வு நடைபெறிகிறது. அதனைத் தொடர்ந்து ஒரு நாள் இடைவெளிவிட்டு நாளை மறுநாள் (புதன்கிழமை) ஆங்கிலத் தேர்வு நடக்க இருக்கிறது. தொடர்ச்சியாக ஒவ்வொரு பாடப் பிரிவினருக்கும் தேர்வு நடத்தப்பட்டு, அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந் தேதி வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் ஆகிய தேர்வுகளுடன் பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவு பெற இருக்கிறது. தேர்வு முடிந்ததும், அடுத்த மாதம் 10-ந் தேதியில் இருந்து 21-ந் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற உள்ளது. இந்த பணியில் 48 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். திருத்தும் பணி நிறைவுபெற்று, மதிப்பெண் பதிவேற்றம் செய்யப்பட்டு, ஏற்கனவே திட்டமிட்டபடி வருகிற மே மாதம் 5-ந் தேதி தேர்வு முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.