ஆஸ்கர் விருதுகளை வென்ற RRR படக்குழுவினருக்கும், முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படக் குழுவினருக்கும் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாபெரும் வரவேற்பு
இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘RRR’ திரைப்படம், கடந்த மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியானது. ராம்சரண், ஜூனியா் என்டிஆா் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன், உலகளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. RRR திரைப்படம் ஆஸ்கா் விருதுக்கான பல்வேறு பிரிவுகளில் விண்ணப்பித்திருந்த நிலையில், ‘ஒரிஜினல் பாடல்’ என்ற விருதின் பிரிவில் 15 பாடல்களில் ஒன்றாக இறுதிப் பட்டியலுக்கு தேர்வாகியுள்ளது. இத்திரைப்படத்தின் மிகப் பிரபலமான நாட்டு, நாட்டு பாடல் மாபெரும் வரவேற்பு பெற்றது. எம்.எம். கீரவாணி இசையமைப்பில் உருவான இந்தப் பாடலை, ராகுல் மற்றும் கால பைரவா பாடியிருந்தனர்.
ஆஸ்கர் விருது
லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வரும் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘RRR’ திரைப்படத்தின் ”நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதை தட்டி சென்றது. இசையமைப்பாளர் கீரவாணி, பாடலை எழுதிய சந்திரபோஸும் ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டனர்.`நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளதால் ரசிகர்கள், திரையுலகினர் உற்சாகத்தில் உள்ளனர்.
சிறந்த ஆவணப்படம்
இதேபோல், யானைகளை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படமான ‘The Elephant Whisperers’ ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
ரஜினிகாந்த் வாழ்த்து
ஆஸ்கர் விருதுகளை வென்ற RRR படக்குழுவினருக்கும், முதுமலை தம்பதி குறித்த ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆவண குறும்படக் குழுவினருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அந்த வகையில், RRR படக்குழுவினருக்கும், முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படக் குழுவினருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்; ஆஸ்கர் விருதுகளை வென்றதற்காக கீரவாணி, ராஜமவுலி மற்றும் கார்திகி குன்செல்வெஸ் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.