முன்னணி நடிகையாக இருக்க கூடிய வித்யா பாலன் எந்த மாதிரியான படங்களில் நடிக்க வேண்டும் என்பதில் தனக்கே இன்னும் ஒரு தெளிவு இல்லை என கூறியுள்ளார்.
செலக்ட்டிவ் படங்கள்
பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை வித்யா பாலன். ஸ்லிம் அண்ட் பியூட்டியாக இருந்தால் மட்டுமே ஹீரோயினாக இருக்க முடியும் என்ற எண்ணத்தை, பாலிவுட்டிலிருந்து கொண்டு மாற்றியவர் நடிகை வித்யா பாலன். தனது கொழு கொழு அழகால் ரசிகர்களை தன் வசம் படுத்தியவர். ஹே பேபி, போல் புல்லையா உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான இவர், மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தி டர்டி பிக்சர் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். வித்யா பாலன் நடிப்பில் வெளியான மிஷன் மங்கள், பிரபல கணித மேதையான சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாற்று படம் ஆகியவற்றில் இவரது நடிப்பு அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
தெளிவு இல்லை
சமீபத்தில் வித்யா பாலன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது; “நான் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கிறேன். எனது படங்கள் வருகிறது என்றாலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கமர்ஷியல் படங்களை தவிர்த்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதே எதிர்பார்ப்புக்கு காரணம். ஆனாலும் நான் எந்த மாதிரியான படங்களில் நடிக்க வேண்டும் என்பதில் எனக்கே இன்னும் ஒரு தெளிவு இல்லை. மனதுக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடித்த என் மீது ஒரு முத்திரை குத்தி இமேஜ் வட்டத்துக்குள் வைத்து விட்டார்கள். கதாநாயகர்களுக்காகவே படங்கள் ஓடிய காலம் இருந்தது. அதன்பிறகு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் ஓடியதை பார்த்தோம். ஹீரோ, ஹீரோயினை பார்த்து படம் பார்க்கும் காலம் மலையேறி விட்டது. படத்தில் நல்ல கரு இருந்தால் தான் ரசிகர்கள் பார்ப்பார்கள்” என்றார்.