ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் 6-வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 33 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனையடுத்து அந்த தொகுதியில் பிப்ரவரி 27-ம் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அதிமுக சார்பில் தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் உள்பட 77 பேர் களம் கண்டனர்.
வாக்குப்பதிவு
ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண்கள், 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 25 பேர் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 27-ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது, ஆரம்பத்தில் இருந்தே பெண்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதேபோல் இளைஞர்கள், முதியவர்களும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். மொத்தமாக சுமார் 75 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.
தொர்ந்து ஏறு முகம்
இதனையடுத்து பதிவான வாக்குகள் அனைத்தும் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. 16 மேஜைகளில் 15 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 6-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 46,174 வாக்குகள் பெற்று, 30 அயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 16,777 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திலும், 2,964 வாக்குகள் பெற்று நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்திலும் உள்ளன. 431 வாக்குகள் பெற்று தேமுதிக 4-வது இடத்தில் உள்ளது.
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.