முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 9-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம்
2023 – 2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அந்த நிதிநிலை அறிக்கை மார்ச் மாதம் 17 அல்லது 20 ஆம் தேதி தாக்கல் செய்ய இருப்பதாக அரசு வட்டாரங்களில் கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக இவை எதுவும் அறிவிக்கப்படவில்லை. நிதிநிலை அறிக்கைக்கு முன்பாக அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படும். அதன்படி, மார்ச் 9 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. இந்த கூட்டத்தில் பட்ஜெட்டில் இடம் பெற இருக்கும் முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
முக்கிய முடிவுகள்
வேளாண்மை தொடர்பாக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இரு நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்ட பின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெறும். குறிப்பாக மகளிருக்கான உரிமைத் தொகை ரூ.1000 ஜூன் மாதம் முதல் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ள நிலையில், அதுகுறித்தும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம். மேலும், அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.